தெலுங்கு ஈபுரூமொழியின் குழவியாம்!தெலுங்கர்கள் யூதர்களாம்!
நந்திவர்மன் பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுவை
www.telugutanam.com என்ற இணையப்புலத்தில் செல்வி முனைவர் சாம்யுக்தா கோனய்யா எழுதிய கட்டுரையில் தெலுங்கு, திராவிட மொழிக் குடும்பத்து மொழி அன்று. தெலுங்கர்கள் திராவிடர்கள் அல்லர். தமிழில் இருந்து பிறந்த மொழியும் அன்று தெலுங்கு என வலிந்து புதிய கட்டுக்கதையை இட்டுக் கட்டியுள்ளார். தெலுங்கு மொழி 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. தெல்மன் என்ற சொர்க்க பூமியில் தோன்றிய மொழி தெலுங்கு. தெல்மன் என்பது தெலுங்கு நாடான ஆந்திரப் பிரதேசத்தையே குறிக்கும் என்று அந்த அம்மையார் கதையளந்துள்ளார்.
அராபிய வளைகுடாவில் உள்ள பகரைன் தில்மன் என்றும் வழங்கப்படும். இந்தத் தெல்மன்தான் பழைய வரலாற்றில், சிந்து சமவெளிக்கும் அசீரியாவுக்கும் இடையில் தொடர்பை உருவாக்கத் துணை புரிந்த துறைமுக நகரமாகும். விவிலிய நூலில் ஆபிரகாம் ஈராக்கில் உள்ள "ஊர்" என்ற ஊரில் இருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதை மெய்ப்பிக்கப் போதுமான அகழ்வாய்வுச் சான்றுகள் கிட்டவில்லை. பழைய ஏற்பாடு விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாறுகள் ஈராக்கில் நிகழ்ந்ததாக யூதர்கள் நம்புகிறார்கள். ஆனால் அசீரிய சொர்க்க நிலமெனப்படுவது தெல்மன்தான். எனது ஆய்வின்படித் தெல்மன் என்பது ஆந்திரப் பிரதேசமே! இதற்குச் சான்றாக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காமக்கூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்தச் சிற்றூர் மக்களுக்கும் யூதர்களுக்கும் ஒப்புமைக் கூறுகள் நிறைய உள்ளன. இவ்வாறு சொல்லிவிட்டு நெடிய பட்டியலைத் தந்துள்ளார் முனைவர் சாம்யுக்தா கோனய்யா.
ஊர் பெயர் ஒற்றுமையை மட்டுமே சான்றாக்கித் தெலுங்கு மக்களை யூதர்களாக்கும் முயற்சி நடக்கிறது. பீகாரில் தமிழ்க்கோடா என்ற ஊர் உள்ளது. ஒரிசாவில் தமிழ்க்குடி என்ற ஊர் உள்ளது. அது மட்டுமல்ல இந்த ஊர்களுக்கு அருகிலேயே பழனி, தேக்கடி, தேனி, போடி என்ற ஊர்ப்பெயர் களும் காணப்படுகின்றன. இவற்றைப் பல ஆய்வுக் கட்டுரைகளில் எடுத்துச் சொன்னவர் பாலகிருட்டினன். இ.ஆ.ப. அவர் இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையருள் ஒருவராவர். எந்த ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் "காமக்கூர்" என்ற ஊரைச் சுட்டிக்காட்டி அந்த ஊருக்குப் பக்கத்தில் "ஊர்" என்ற பெயரில் ஊர் ஒன்று உள்ளது என ஈராக்கில் காணப்படும் ஊருடன் ஒட்டுப்போட அம்மையார் முயல்கிறாரோ அதே ஆந்திராவில் "தமிழ்" என்ற பெயர் ஒட்டுப் பெற்றுள்ள 29 ஊர்கள் உள்ளன என்கிறார் பாலகிருட்டினன்.
இந்தியாவெங்கும் தமிழ் ஆண்டது. இந்தியாவெங்கும் தமிழ் பேசப்பட்டது என டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே சொல்லி உள்ளார். இந்தியாவெங்கும் தமிழ் என்ற சொல் இடம் பெற்ற ஊர்ப் பெயர்களைப் பாலகிருட்டினன் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் 29, அசாமில் 38, பீகாரில் 53, குசராத்தில் 5, கோவாவில் 1, அரியானாவில் 3, இமாச்சலப் பிரதேசத்தில் 34, கர்நாடகாவில் 24, மகாராட்டிராவில் 120, மேகாலயாவில் 5, மணிப்பூரில் 14, மத்திய பிரதேசத்தில் 60, நாகாலாந்தில் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசத்தானில் 26, மேற்கு வங்கத்தில் 24, உத்திரப் பிரதேசத்தில் 64, தமிழ்நாட்டில் 10 என்று 612 ஊர்கள் தமிழ்ப்பெயருடன் உள்ளதை ஆய்வுக்கட்டுரைகளில் சொன்ன அருந்தமிழர் பாலகிருட்டினன். அதை இந்தியன் எக்சுபிரசில் நானும் பதிவு செய்துள்ளேன். இவ்வளவு சான்றுகள் இருந்தும் தமிழர்கள் தூங்குகின்றனர். ஒரே ஒரு சிற்றூரை எடுத்து வைத்துக் கொண்டு தெலுங்கின் மூலமொழியாக ஈபுரூ மொழியைக் காட்டவும் தெலுங்கு தமிழில் இருந்து பிறந்த மொழி அன்று என நிறுவவும் படாத பாடு படுகிறார் செல்வி சாம்யுக்த கோனய்யா. காமக்கூரில் காணப்படும் பழங்குடிகள் விவிலிய நூல் கூறும் தொலைந்துபோன 12 பழங்குடிகளுள் ஒன்று என்பதாகவும் கதை அளக்கிறார். அந்தக் கிராமத்தை ஆண்ட "கோனய்யா" அரச மரபினர் எனவும் அந்த மரபுவழி வந்தவர் என்றும் தன் குலப்பெருமையைப் பறைசாற்றுகிறார்.
"கோன்" என்றால் அரசன் அரசனை "அய்யா" என அழைத்த காமக்கூர் மக்கள் தமிழர்களே! நெல்லூர் என்று தமிழ்ப் பெயருடைய மாவட்டத்தில் சிற்றூர் மட்டும் யூதர்கள் ஊராகி விடுமா? தமிழில் இருந்து பிறந்த மொழி தெலுங்கு என ஒப்புக் கொள்ளத் தெலுங்கர்களே! ஏன் வெட்கப்படுகிறீர்கள்? வரலாற்றைத் திரித்து உங்களை யூதர்களாக்கிக் கொள்ளுகிறீர்கள்? நம்மிடையே வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசிக்கொண்டிருந்தும் தமிழுக்காக உழைப்பவர்கள் இந்தக் கட்டுக்கதைகளைக் கண்டிக்கவேண்டாமா?
No comments:
Post a Comment